அம்மானை

அம்மானை விளையாட்டு
அம்மானை என்பது தமிழ்நாட்டு மகளிர் விளையாட்டாகும். மூன்று பெண்கள் அமர்ந்து அம்மானைக் காயை வீசி விளையாடும் விளையாட்டாகும். இது விளையாட்டாக இருந்தாலும், கவிதை புனையும் அறிவுப்பூர்வமான அமைப்புடையதாக இருந்ததால் இவ்விளையாட்டு இலக்கிய வடிவம் பெற்றது.
ஒருவர் ஆடுவது சங்ககாலப் பந்து விளையாட்டு. மூவர், ஐவரெனக் கூடிப் பாட்டுப் பாடிக்கொண்டு ஆடுவது அம்மானை விளையாட்டு. இது அண்மைக்காலம் வரையில் தஞ்சைப்பகுதி அந்தணர் இல்லங்களில் விளையாடப்பட்டு வந்தது. இணைப்பு ஓவியமும் அவர்கள் விளையாடிய பாங்கைப் காட்டுவதேயாகும்.
மேலும் பெண்பற் பிள்ளைத்தமிழில் கடை மூன்று பிரிவுகளில் முதலானதாகும். சான்றாக - அம்மானை, நீராடல், ஊசல் என்பதாகும்.
மூன்று பேர் விளையாடுவதாலும், அம்மானைப் பாடல் மூன்று பேர் பாடுவதாக அமைந்துள்ளமையாலும் இதனை மூவர் அம்மானை என்றும் குறிப்பிடுகின்றனர். [1] [2]
அமைப்பு தொகு
மகளிர் மூவர், ஏதோ ஓரு பொதுவான செய்தியையோ, அரசன் புகழையோ, இறைவன் அருளையோ பாடி அவர்களை அடைய வேண்டும் என்ற ஆசையோடு அம்மானைக் காயை வீசி விளையாடும் விளையாட்டே “ அம்மானை “ விளையாட்டாக அமைந்தது. இவ்விளையாட்டில் மூன்று பெண்கள் அம்மானைக் காய்களை ஏந்தி நிற்பர். முதற்பெண், யாரேனும் பாட்டுடைத் தலைவனை மனதில் கொண்டு பொதுவான ஒரு செய்தியைக் கூறிக் காயை வீசிப் பிடித்து 'அம்மானை' என்பாள். இரண்டாமவள் அப்பொதுச் செய்தியோடு பொருந்திய ஒரு வினாவைக் கேட்டுக் காயை வீசி 'அம்மானை' என்பாள். மூன்றாமவள் அவ்வினாவிற்கு இரு பொருள்படும்படி விடை கூறி காயை வீசிப் பிடித்து 'அம்மானை' என்பாள். இதுவே 'அம்மானை' விளையாடும் முறையாகும். சான்றாகத் திருவெங்கைக் கலம்பகத்து அம்மானைப் பாடலை எடுத்துக் கொள்வோம். இப்பாடலை பிள்ளைப் பெருமாள் அய்யங்கார் பாடியுள்ளார். அப்பாடலாவது,
முதற்பெண் (பொதுச்செய்தி)
“ தேனமருஞ் சோலைத் திருவரங்கர் எப்பொருளு
மானவர் தாம் ஆண்பெண் அலியலர் காணம்மானை
”
வண்டுகள் விரும்பும் சோலைகள் சூழ்ந்த திருவரங்கநாதர் எல்லாப் பொருளாகவும் திகழ்வாராயினும் ஆணும் பெண்ணும் அலியும் அல்லர் அம்மானை.
இரண்டாவது பெண் (வினா)
“ ஆனவர் தாம் ஆண் பெண் அலியலரே யாமாகில்
சானகியை கொள்வரோ தாரமாய் அம்மானை?
”
அவ்வாறான திருவரங்கர் ஆணும் பெண்ணும் அலியும் அல்லாதவரேயானால் சீதையை மணந்தது ஏன்.?
மூன்றாவது பெண் (விடை)
“ “தாரமாய் கொண்டது மோர் சாபத்தாலம்மானை” ”
சீதையை மணந்ததும் ஒரு சாபத்தால் அம்மானை. சாபம் -பிருகு முனிவர் சாபத்தால், சிவபிரானது வில்லால் என்னும் இருபொருள் பட விடை கூறி அம்மானைக் காயை வீசிப் பிடித்தாள்.
சிலப்பதிகாரத்தில் அம்மானை தொகு
கி.பி.2 ஆம் நூற்றாண்டில் அம்மானை முதன் முதலாக இலக்கிய வடிவம் பெற்றது. நாட்டார் வாய்மொழி இலக்கியத்தை முதன்முதலில் இலக்கியத்தில் பதிவு செய்த இளங்கோவடிகளே அம்மானையையும் சிலப்பதிகாரத்தில் பதிவு செய்துள்ளார். சிலப்பதிகாரத்தில் வாழ்த்துக் காதையில் 'அம்மானை வரி' என்ற பகுதியில் நான்கு பாடல்கள் அமைந்துள்ளது. இப்பாடல்களில் சோழ மன்னர்கள், மனுநீதிச் சோழன், கரிகால் சோழன், சிபி மன்னன், தூங்கெயில் எறிந்த தொடிதோட் செம்பியன் ஆகியோரின் அருஞ் செயல்களைப் பாடி அவர்களை அடைய வேண்டும் என்று மூவர், சோழர்களின் தலைநகரான பூம்புகார் நகரைப் பாடுவதாக அமைந்துள்ளது.
Comments
Post a Comment